அறிவமைப்பு சாஸ்திரம்

அன்புடையீர், 
வணக்கம். இன்றைய சூழலில்  உலகம் போற்றும் வகையில் தம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும் என்பது குழந்தைகளைப் பெற்றவர்களின் கனவாகும். நாடு செழிக்க, பெற்றவர்களின் கனவை நனவாக்க நமது அரசும் தன்னால் இயன்ற பொருளாதார மற்றும் நிர்வாக உதவிகளைச் செம்மையாகச் செய்துவருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மக்களும், அரசும் எவ்வளவோ முயற்சித்தும் நம் குழந்தைகளின் கல்வித்தரம் உயரவில்லை என்பது யதார்த்தமாகும். இந்த சூழலில், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும், பூனா பல்கலைக்கழத்திலும் பயின்று பேராசிரியனாகப் பணிபுரிந்த என்னால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுக்கமுடியும் என்பதைத் தீர்க்கமாக நம்பி கடந்த பதினெட்டு வருடங்களாக எந்த வித அரசு உதவியையும் கோரமல் பல வாத விவாதங்களுக்குப் பின் "அறிவமைப்பு சாஸ்திரம்" என்ற சாஸ்திரத்தை வகுத்து மாணவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். [http://adavu.blogspot.in/] இது லட்சம் லட்சம் பக்கங்களைக் கொண்டதல்ல. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் E = mc^2 போன்று ஒரே கேள்வி ஒரே பதிலைக் கொண்டது. அந்த ஒரே கேள்வி பதிலை சூழலுக்கு ஏற்ப நாம் மாற்றிப்  பயன்படுத்தி கொள்ளலாம். பயன்படுத்திப் பார்க்காமல் இது எதற்கும் உதவாத குப்பை என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். இது ஒரு ஆசிரியனின் அறிவுரை என்பதை கருத்தில் கொண்டு பயன்படுத்திப் பாருங்கள். 

அறிவமைப்பு சாஸ்திரத்தின் முக்கியத்துவம்:
1. அறிவு அமைப்பற்றதா? ஒவ்வொரு ஆசிரியனின் அறிவும் நம் குழந்தைகளின் வழிகாட்டி.  ஆனால், 'அறிவிற்கு அமைப்பு இல்லை' என்ற கருத்து ஆசிரியர்களின் மத்தியிலும், மக்களின் மத்தியிலும் நிலவி வருகிறது. அமைப்பற்ற அறிவால் நமக்கு வழிகாட்ட முடியுமா? அமைப்பற்ற அறிவிற்கு ஆசிரியர்களால் வழிகாட்ட முடியுமா? அமைப்பற்ற ஒன்றில் வழிகாட்டி என்பது பொருளற்றது என்பதை இன்றைய ஆசிரியர்கள் உணரவேண்டும். அறிவிற்கு அமைப்பு உண்டு. அந்த அறிவமைப்பை அறிந்த ஆசிரியர்களால் மட்டுமே அறிவிற்கு வழிகாட்ட முடியும். நம் குழந்தைகளின் அறிவை மேம்படுத்த முடியும். அறிவமைப்பறியாதார் அறிவு அமைப்பற்றது என்பர். 

2. அனைத்தையும் காண்பது ஒரே அறிவா, வெவ்வேறு அறிவா? அனைத்தையும் காண்பது ஒரே அறிவுதான். மெய்ப்போருள் காண்பது அறிவு. செம்பொருள் காண்பது அறிவு. அனைத்தையும் காண்பது அறிவு. அனைத்தையும் காண்பது ஒரே அறிவுதான். ஆனால், ஆசிரியர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் இதற்கு எதிர்நிலையான கருத்து நிலவி வருகிறது. தமிழைக் காண்பது தமிழறிவு. ஆங்கிலத்தைக் காண்பது ஆங்கில அறிவு.  கண்ணைக் காண்பது கண்ணறிவு. காதைக் காண்பது காதறிவு. கையைக் காண்பது கையறிவு. புல்லைக் காண்பது புல்லறிவு. கணக்கைக் காண்பது கணக்கறிவு. கணிணியைக் காண்பது கணினி அறிவு. அணுவைக் காண்பது அணுவறிவு. கட்டிடத்தைக் காண்பது கட்டிட அறிவு. கழுத்தைக் காண்பது கழுத்தறிவு. காலைக் காண்பது காலறிவு. காலறிவைக் கொண்டு கழுத்தைக் காணமுடியாது. கழுத்தறிவைக் கொண்டு காலைக் காணமுடியாது. இந்த மாதிரி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வியாபார லாப நோக்கில் மக்கள் மத்தியில் உலாவிட்டது நம் ஆசிரியர்களே! இதன் மறைமுக நோக்கம் மருத்துவ அறிவென்றால் அதற்கு ஒருவிலை, பொறியியல் அறிவென்றால் அதற்கு ஒரு விலை, தமிழறிவு என்றால் அதற்கு ஒரு விலை, ஆங்கில அறிவென்றால் அதற்கு ஒரு விலை!!!   இது வியாபார யுக்தி. நம் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் யுக்தியல்ல.  அனைத்தையும் காண்பது ஒரே அறிவு தான்.  ஒரே அறிவைக்கொண்டு தான் நாம் அனைத்தையும் புரிந்துகொள்கிறோம். ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள ஒவ்வொரு விதமான அறிவை நாம் பயன்படுத்துவதில்லை.    

3. அறிவமைப்பு சாஸ்திரம் ஏன் எழுதப்படவில்லை?  அறிவு அமைப்பு சாஸ்திரம் எழுத ஒருவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளின் அறிவு தேவை. ஒன்றைப் பற்றி, ஒவ்வொன்றையும் பற்றி தாம் அறிந்ததென நம் முன்னோர்கள் கூறியவைகளை அறிந்து வகைப்படுத்தி அவைகளைப் பின்னியிருக்கும் நூலை அடையாளங்கண்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இது,  நான் கணக்கு வாத்தியவர், எனக்குக் கணக்கு மட்டும் தான் தெரியும்; நான் அறிவியல் வாத்தியார், எனக்கு அறிவியல் மட்டும் தான் தெரியும்; நான் உயிரியல் வாத்தியார், எனக்கு உயிரியல் மட்டும் தான் எனக்குத் தெரியும்;  நான் தமிழ் வாத்தியார், எனக்குத் தமிழ் மட்டும் தான் தெரியும், நான் ஆங்கில வாத்தியார், எனக்கு ஆங்கில மட்டும் தான் தெரியும் என பெருமையுடன் கூறிக்கொள்ளும் ஆசிரியர்களால் முடியாத காரியம். இவர்களால் அறிவின் அமைப்பை அறிந்து கொள்ளவோ, அந்த அறிவு அமைப்பு சாஸ்திரம் எழுதவோ ஒருகாலும் முடியாது.            
4. அறிவமைப்பு சாஸ்திரம் கல்விக்கு எதிரானதா? அறிவமைப்பு சாஸ்திரம் கல்விக்கு எதிரானதல்ல. கல்வி முறையை எளிமைப்படுத்தும். மாணவர்களின் சுய அறிதிறனை செம்மைப்படுத்தும். மாணவர்களின் அறிதிறனை செம்மைப்படுத்துவது தானே கல்வியின் அடிப்படை நோக்கம்.
5. அறிவமைப்பு சாஸ்திரம் எவ்விதத்தில் கல்வியை மேம்படுத்தும்?
அ. வழி அறிந்தவனுக்குக் வழிகாட்டத் தேவையில்லை. உதாரணமாக, என்ஜின் டிசைன் அறிந்தவானால் எந்த ஒரு எஞ்சினின் டிசைனையும் புரிந்துகொள்ளமுடியும். புரிந்துகொண்டு சூழலுக்கு புது எஞ்சினை வடிவமைக்க முடியும். அதே போல், அறிவைமைப்பை அறிந்தவனுக்கு, அதாவது, ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள தான் காணவேண்டியதெவை என்பதை அறிந்தவனுக்கு, ஒவ்வொன்றையும் பற்றி அறிந்துகொள்ள தான் காணவேண்டியதெவை என்பதைத் திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. அவனே, மாணவனே, ஒவ்வொன்றையும் பற்றி அறிந்துகொள்ள தான் காணவேண்டியதெவை என்பதை அறிந்து அவற்றை காணும் வழிமுறைகளையும் அறிந்துகொள்ளுவான். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆசிரியரைத் தேடி அலையத்தேவையில்லை.  அவனவனுக்குப் பிடித்ததை அறிந்துகொள்ளும் வழிமுறைகளை அவனே தேடிக்கொள்வான்.  மீனை விலை கொடுத்து வங்காதே! மீன் பிடிக்கககற்றுக்கொள்!!   அறிவை விலை கொடுத்து வங்காதே! ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள நீ காணவேண்டியதெவை என்பதை அறிந்து கொண்டு, ஒவ்வொன்றையும் பற்றியும் அறிந்துகொள்ளும் வழியை நீ தேடிக்கொள். இதுவே, ஒரு சிறந்த கல்வியின் நோக்கமாகும். இதுவே அறிவு அமைப்பு சாஸ்திரத்தின் நோக்கமாகும்.       
ஆ. இன்றைய கல்வி முறைப்படி, +2 முடிக்க 12 வருடங்களும், இளங்கலை முடிக்க 3 வருடங்களும், முதுகலை முடிக்க 2 வருடங்களும், Ph.D முடிக்க 5 வருடங்களும், மொத்தமாக 12+3+2+5 = 22 வருடங்கள் கல்வி என்ற பெயரில் விரையமாகிறது. 22 வருடங்களில் கற்றும் நம் மாணவர்களுக்கு "ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள நாம் காணவேண்டியதெவை?" என்ற கேள்விக்கு பதில் தெரியாது என்பது கொடுமையிலும் கொடுமையான விஷயமாகும். 22 வருடங்களை 10 வருடங்களாக, 5 வருடங்களாகக் குறைக்க வழியில்லையா? 22 வருடங்களைச் செலவழித்து ஒருவன் கற்றுக்கொள்வதை மிகக்குறைந்த காலத்தில் கற்றுக்கொள்ள அறிவமைப்பு சாஸ்திரம் வழி செய்கிறது.  அறிவமைப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்திப் பாருங்கள். 

இ. ஒரு மனிதனுக்கு தைரியத்தைக் கொடுப்பது அறிவு. எரியும்  நெருப்பை எப்படி அணைப்பது என்பதறிந்தவனுக்கு எரியும் நெருப்பைக் கண்டு பயம் இருக்காது. பாம்பை பிடிக்க அறிந்தவனுக்கு பாம்பைப் பற்றி பயம் இருக்காது. ஆனால், இன்றைய மாணவர்கள், தேர்வு என்றால் பயப்படுகிறார்கள். தேர்வு பயம் ஏன்? எதையும் தீர்க்கமாக அறியாததால்! ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை மற்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தும் விதத்தில் இன்றைய கற்பிக்கும் முறை இல்லை என்பது யதார்த்தம். ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள தான் காணவேண்டியதெவை என்பதை அறிந்துகொண்டு, எதையும் பற்றி என்னால் அறிந்துகொள்ள முடியும் என்ற தைரியத்தை மாணவர்களுக்குக் கொடுக்கிறது அறிவமைப்பு சாஸ்திரம். 
ஈ. அடுத்து, மாணவர்களின் மனஅழுத்தமும், அதிகரிக்கும் தற்கொலைகளும்! காரணம், மாணவர்களின் எண்ணவோட்டத்தை சரி செய்யாததால் ஏற்படுவது. இதைத் தடுக்க, ஆசிரியர்கள் அறிவமைப்பு சாஸ்திரத்தை முறையாக கற்று, மாணவர்களின் அறிவில் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

உ. மொழிப்பிரச்சனை: நாட்டில் இப்போது தமிழ் மொழியில் படித்தால் ஒருவன் அறிவாளியாவானா, ஆங்கில மொழியில் படித்தால் ஒருவன் அறிவாளியாவானா, ஹிந்தி  மொழியில் படித்தால் ஒருவன் அறிவாளியாவானா என்ற மூடத்தனமான விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி விவாதித்துக் கொண்டு மக்களையும், மாணவர்களையும் குழப்பத்தில் தள்ளும் கயவாளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி:  எருமை பற்றி அறிந்து கொள்ள எருமையைக் காணவேண்டுமா, தமிழ் மொழியைக் காணவேண்டுமா, ஆங்கில மொழியைக்காண வேண்டுமா? எருமையைத் தான் காணவேண்டும் என்பான் அறிவாளி. ஆங்கில மொழியைக் காணவேண்டும் என்பவன் கயவாளி! கண்ணைப் பற்றி அறிந்துகொள்ள கண்ணைக் காணவேண்டுமா, தமிழ் மொழியைக் காணவேண்டுமா, ஆங்கில மொழியைக்காண வேண்டுமா? கண்ணைத்தான் காணவேண்டும். கண்ணைக் கண்டால்தான் கண்ணைப் பற்றி அறிந்து கொல்லமுடியும். கண்ணைப்பற்றி அறிந்து கொள்ள ஆங்கில மொழியைக் காணவேண்டும் என மாணவர்களுக்கும், மக்களுக்கும் தவறான வழியைக்காட்டும்  ஆசிரியர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதும் சகிக்க முடியாத உண்மைதான்!

 இப்படி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள 'அறிவமைப்பு சாஸ்திரத்தை மனநிறைவுடன் தமிழக மக்களின் பொற்பாதங்களில் சமர்ப்பதில் பெருமை அடைகிறேன்.  இதை எழுதி முடிக்கும் வரை ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் சகித்துக்கொண்டு நின்ற என் மகன்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் அபிராமி பிரசாத், மனைவி சிவபாக்கியத்திற்கும்,  எனக்கு இந்த வேலையை முடிக்க உறுதுணையாக இருந்த என் ஆசிரிய மாணவ நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு என் கடமையையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
அறிவமைப்பு சாஸ்திரத்தைப் பயன்படுத்துங்கள்! என் உழைப்பு வீண் போகாது.